Friday, March 30, 2007

கதை கேளு - part 3

தாத்தா.....

VKJ தாத்தா....

போன பதிவில் என் பாட்டி பெயர் கொடுக்க மறந்து விட்டேன். அவர் பெயர் அவயாம்பாள். மயிலாடுதுறையில் பிறந்ததால் அந்த ஊர் அம்பாள் பெயர். தாத்தா பெயர் ஜானகிராம ஐயர்.
உங்களில் யாருக்காவது உங்கள் தாத்தாவிற்கு 4-5 தலைமுறை முன் வாழ்ந்த தாத்தாக்கள் பெயர் தெரியுமா?? எங்கள் குடும்பத்தாருக்கு தெரியும். கடந்த 200 தலைமுறை யாக வாழ்ந்தவர் எல்லோர் பெயரையும் எழுதி
வைத்து இருக்கிறார்கள் எங்கள் குடும்பத்தில். முன் காலத்தில் மதுரையை ஆண்ட 'ராணி மங்கம்மா' வின் அரசவையில் உயரிய பொருப்பில் இருந்து இருக்கிறார்கள் தாத்தாவின் முன்னோர். அவருக்கு சொந்த ஊர் 'ஸ்ரீவில்லிபுத்தூர்'
அருகில் 'ஆதனூர்'. தாத்தாவின் அப்பா பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தன் ஊரிலிருந்து பெயர்ந்து வந்து சோழ நாட்டில் தன் உழைப்பால் கால் ஊன்றி இன்று வரை நாங்கள் அனுபவிக்கும் செல்வங்களை சேர்த்து வைத்தவர். தாத்தா சிறுவனாக இருந்த போதே அவர் அப்பா காலமாகிவிட்டார். சிறு வயதில் தன் அண்ணன் நிழலுக்குள் இருந்து கொண்டு எல்லா வேலையும் கற்றவர். கூடுதலாக ஆண்மீகத்திலும், காஞ்சி சங்கர மடத்தின் மீதும் ஈடுபாடு. அதிலும் 'பரமாச்சாரியார்' மீது தீவிர பக்தி. 'பரமாச்சாரியார்' எங்கு எப்போது வெளியூருக்கு போணாலும் அவர் கூட இவரும் நடை பயணமாகவே போய் இருக்கிறார். தாத்தா ஒரு தீவிர விவசாயி யும் கூட. 2 வேளையும் தவராமல் தானே நிலங்களை போய் பார்த்து வருவார்.
எனக்கு சின்ன வயதில் தாத்தா என்றால் சிம்ம சொப்பனம். வீட்டில் ரகளை எல்லாம் அவர் இல்லாத போது தான். வில் வண்டி தெரு முனை வரும் சத்தம் கேட்டாலோ எல்லாம் அடங்கி விடும்.வயது ஆக ஆக தான் அவர் மீது ஒரு மரியாதை, அன்பு எல்லாம் வந்தது. தாத்தா வுக்கு வீட்டின் எந்த விஷயம் ஆனாலும் அதை 'பரமாச்சாரியார்' இடம் சொல்லி
விட்டால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஒரு முறை நான் படித்து வந்த பள்ளியின் ஹாஸ்டலில் அடுத்த வருடத்திற்க்கு இடம் நிராகரிக்கப்பட்ட போது கவலையுடன் இந்த விஷயத்தை பெரியவரிடம் சொல்லி இருக்கிறார். இதை கேட்டு கொண்ட 'பரமாச்சாரியார்'உம், 2 நாட்கள் சென்று
அந்த ஸ்கூல் நிருவணர் அவரை பார்க்க வந்த போது கேட்டு இடம் வாங்கி கொடுத்தும் உள்ளார். தாத்தா வின் 'பக்தி' அவ்வளவு.
தாத்தா சிவ பூஜை செய்யும்போது யாரும் பேச கூடாது வீட்டில். அவரும் மணிக்கணக்காக பேச மாட்டார். தாத்தா எனக்கு தெரிந்து இன்று வரை சுடு தண்ணீரில் குளித்தது இல்லை. மார்கழி மாத பூஜைக்காக 2AM எழும் போதும் பச்சை தண்ணீர் தான். தன் வாழ்க்கையை ஒரு தவம் போல் வாழ்ந்து வருபவர்.
பாட்டிக்கும், தாத்தாவுக்கும் சண்டைகள் வரும் தான். ஆனாலும் பாட்டி சொல்லாமல் தாத்தா எதும் செய்ததில்லை. பாட்டியின் மறைவுக்கு பிறகு அவருக்கு கொஞ்சம் தொய்வு தான். 90 வயது ஆகிறது அவருக்கு.

என் அம்மாவைப்பெற்ற தாத்தா, பாட்டியை பற்றி அடுத்த பதிவில்.............

No comments: