Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Wednesday, July 11, 2007

கதை கேளு கதை கேளு - part 11


போன ப்ளாக் தொடர்ச்சி...

ஒரு வழியாக சம்மதம் கிடைத்த பின் ஊருக்கு போய் விட்டார்கள். இருந்தாலும் மனதுக்குள் சந்தேகம் இருந்து இருக்கும் போல. அடுத்த நாளும் வந்து என்னுடைய reaction ஐ பார்த்து விட்டு போனார்.

இப்படியாக எங்கள் திருமணம் நிரைவேறியது.

இதர்க்குள் எனக்கு தெரிந்து விட்டது இவருடைய குணம்.

வேலை என்று வந்து விட்டால் மற்றவை எல்லாம் ( அம்மா, அப்பா உள்பட) அப்புறம் தான்.

முன் கோபி...

அது இருக்கட்டும்.. எனக்கு கோபம் வராதா என்ன?

ஆனால் இவரின் கோபம் கண்டு இப்போதெல்லாம் எனக்கு வருவதே இல்லை.

சாப்பாடு, முக்கியமாக காபி நன்றாக இருக்க வேண்டும்.

இதில் நான் பிழைத்தேன். முதல் 1 மாதம் கஷ்டமாக தான் இருந்தது. அப்பொழுது எல்லாம் இவரின் சித்தப்பா, எங்கள் கூடவே இருந்தவர், தான் எனக்கு உதவுவார். இவருக்கு முன்னாலேயே சாப்பிட வந்து, சமையலில் என்ன குறை? என்ன செய்தால் சரி செய்யலாம் என்று சொல்வார்.

இரவில் திடீர் என்று பக்கத்தில் பார்த்தால் ஆள் இருக்க மாட்டார். 2nd shift ஐ பார்க்க surprise ஆக factory க்கு போய் இருப்பார்.

அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். திருநகரில் தான் ஜாகை. எனக்கு மறக்க முடியாத நாட்கள்.

இப்பொழுதும் அதே உற்சாகம், அதே commitment, அதே போல அயராது உழைக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இவரிடம் இருக்கிறது.

இன்றோ பொருப்புகளும் challenges ம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இதில் மயிலாடுதுறை, பாண்டிச்சேரி & சென்னை என்று காரில் அலைய வேண்டும்.

எனக்கு சில நாட்கள் தோன்றும்..
எப்படி இவரால் இப்படி அலைய முடிகிறது என்று.

ஒரு நாள் காரில் ஊருக்கு போய் வந்தாலே 4 நாட்கள் ஆகிறது எனக்கு உடல் நேராக.

அடிக்கடி இவர் சொல்லும் வாக்கியம் தான் அப்பொது எல்லாம் நினைவுக்கு வரும். " சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட, எலிக்கு தலையாக இருக்கலாம்"

நியாயம் தான். அதற்கு உழைத்தால் தானே முடியும்.

மதுரையை விட்டு சென்னைக்கு 1990 ல் வந்த போதே கையில் கிருஷ்ணா குழந்தை.

அப்போதிலிருந்தே நான் சென்னையில். இவர் எப்பொழுதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு.

கல்யாணம் ஆன மறு நாளே சொல்லிவிட்டார், வீட்டு நிர்வாகம் முழு பொருப்பும் என்னிடம் என்று.

அதனால் எனக்கு குடும்ப விஷயங்களில் இவரின் தலையீடு இல்லை.

இதில் அனுகூலமும் உண்டு. இடையூறும் உண்டு.

என் பிள்ளைகளின் பள்ளியில் இது வரை அவர்களின் அப்பா யாரென்றே தெரியாது.

இதையெல்லாம் நான் என் பார்வையில் Escapism என்று தான் சொல்வேன்.

இவரின் காரணம்..... நேரமின்மை.

அப்பாவுக்கு ரொம்பவே பயந்த... சரி சரி .... மரியாதை கொடுக்கும் பிள்ளை.

அம்மாவுக்கு எல்லாமே இவர் தான்.

First child syndrome..... கொஞ்சம் அதிகமாகவே உண்டு.

அது மற்றவர்களுக்கும் இருக்கிறது என்று புரிந்து கொள்ளத்தெரியாது.

தன் அம்மாவின் மறைவுக்கு அப்புறம் தன் பெண்ணிடம் அன்பு முழுவதையும் அள்ளி வைத்து இருப்பவர்.

மற்றவர்க்கு உதவுவதில் பாரபக்ஷம் பார்க்க மாட்டார்.

அவர்கள் அதை நியாபகம் வைத்து இருப்பார்களா என்று யோசிக்க மாட்டார்.

தான் வாழும் சமூகத்தின் மேல் ஒரு நம்பிக்கை உண்டு. நாட்டின் மேல் ஒரு பக்தி.

"கொஞ்சம் வேலை பளுவை குறைக்கலாமே" என்று சொன்னால், "நம் குடும்பத்தை மட்டும் பார்த்தால் போதாது. என்னை நம்பி 500 குடும்பங்கள் உள்ளது. அதை பார்" என்பார்.

PENNY WISE. POUND FOOLISH. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தம் இவர்.

ஆபீஸ் டென்ஷனில் இவர் கத்தும் போது, நமக்கு 'இதற்கு மேலும் இங்கு வேலை செய்ய வேண்டுமா?' என்று தோன்றும்.

எனக்கும் வீட்டை விட்டு ஓடி போக வேண்டும் போல இருக்கும்.

100% Man Manager என்று சொல்ல மாட்டேன்.

அதற்கு இன்னும் பொறுமை அவசியம்.

அது சற்று குறைவு இவரிடம். தான் சொல்வது நடக்கவில்லை என்றால் யாருக்கும் கோபம் வரும்.

இதை புரிந்தவர்கள் தான் இவரிடம் வேலை செய்ய முடியும்.

வசதி வாய்ப்புகள் இருந்தும் சிம்பிளான தேவைகள்.

55 வயதில் எனக்கு Retirement என்று சொல்லிக்கொண்டு இருப்பவர். ஆனால் ஒரு மணி நேரம் கூட வீட்டில் ஓய்வாக உட்காற முடியாது. இவரை அப்படி உட்காற வைத்தால் நாம் வீட்டில் இருக்க முடியாது.

வெளி பழக்கங்கள் எல்லாமே இது நாள் வரை professional contacts என்பதால் அதற்கு அப்பாற்பட்டு ஒரு உறவே கிடையாது.

நானும் ஒருமுறையேனும் தனியாக இவருடன் 10 நாள் எங்கேயாவது போய் வரவேண்டும் என்று நினத்தது உண்டு.
ம்.....ஹூம். அது இனியும் நடக்க வாய்ப்பு இல்லை.

தனிமையே பிடிக்காது இவருக்கு.

போதுமே சுதாகரனை பற்றி நான் எழுதியது.
அடுத்தது..........
முன்னமே சொன்னது போல
என் தைவான், தாய்லாந்து பயண அனுபவங்கள்.

Tuesday, July 10, 2007

கதை கேளு கதை கேளு - part 10 ( அட... 10ஆம் தேதி 10 ஆம் பாகம்)




இன்றுடன் எனக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஓடி விட்டன.........
இதை விட எனக்கு அருமையான நாள் கிடைக்கப்போவதில்லை


என் 'அன்பு' (hahaha....) கணவரைப் பற்றி எழுத.....

அதனால் அவரைப்பற்றி.....
அவர் சுதாகரன்....

கல்லூரி படிப்பு முடியும் சமயம். Study Holidays க்கு நான் வீட்டிற்க்கு வந்து தங்கிய போது தாத்தா ஒரு file ல் நிரைய ஜாதகங்கள் வைத்து இருப்பதை பார்த்தேன். எனக்கு தெரியும் அதெல்லாம் எனக்கான வரண்கள் தான் என்று. எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. தாத்தாவிடம் எதிர்த்து பேசியே பழக்கம் இல்லை எனக்கு.அவர் எடுத்த முடிவுக்கு வீட்டில் அனைவரும் சரி சொல்வார்கள். இதில் நான் என்ன சொல்ல போகிறேன்?
ஆனாலும் 4 நாட்களுக்கு பிறகு ஒரு ஆர்வம். File ஐ திறந்து பார்த்தேன். 4-5 ஜாதகங்கள் இருந்தது. அதில் ஒன்று இவருடையது. பாட்டியும், மற்றவர்களும் பேசிக்கொண்டதை வைத்துஇவர் வீட்டிற்க்கு ஜாதகம் -official ஆக வாங்க போவதாக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள்.
யார் அம்மா, அப்பா,தங்கை, தம்பி மற்றும் என்ன ஊர் என்று பார்த்துக்கொண்டு வந்தேன். 2 நாட்களில் ஹாஸ்டலுக்கும் போய் விட்டேன் exams எழுத.
ஹாஸ்டலில் எனக்கு சில friends சிதம்பரத்திலிருந்து உண்டு. சுதாகருக்கும் சிதம்பரம் தானே. அதுவும் Annamalai University. அவர்களிடம் விசாரிப்பது என்று முடிவு.
எதோ பேசிக்கொண்டு இருக்கும்போது தீபா, ஸ்ரீநிவாசன் தெரியுமா? அவங்க அப்பா Geology Head of the Dept. அவங்க அண்ணன் சுதாகரனை தெரியுமா? என்று கேட்டேன்.
அவளோ தீபா தெரியும். வாசன் தெரியும். அவன் என் தங்கையின் classmate தான். ஆனால் நீ சொல்வது போல அவர்களுக்கு அண்ணன் கிடையாது. அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை, என்று சொல்லி விட்டாள். அப்புறம் இவர் ஒரு முறை சொல்லி தான் தெரிந்தது இவரை அந்த ஊரில் யாருக்குமே தெரியாது என்பது. இவர் பாட்டி வீட்டிலேயே வளர்ந்து படித்ததால், இப்படி இவர்களுக்கு ஒரு அண்ணன் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாதாம்.
அந்த சமயம் நாம் தான் தப்பாக பார்த்துக்கொண்டு வந்து விட்டோமோ என்று அதோடு விட்டு விட்டேன்.
April 23rd 1988, Exams முடிந்து வீட்டுக்கு வந்தேன். அதற்குள் பெண் பார்ப்பதற்க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. நானும் சண்டை போட்டேன். Choice of the Groom க்கு இல்லை. Choice of the Age Gap க்கு.
ஆமாம் எனக்கும் இவருக்கும் 9 வயது GAP. இன்று வரை வருத்தம் தான் எனக்கு. ஏன் என்றால் என் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கூட 4 வயது தான் GAP.
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வருத்தத்தில் தான் சண்டை. அடுத்த பாயிண்ட்.. ஏன் photo வாங்கி வரவில்லை? என்னுடைய album லிருந்து என் photo வை ( அதுவும் என் friend உடன் இருக்கும்) எடுத்து போன தாத்தா மற்றும் அத்தைஏன் அவர்கள் வீட்டில் கேட்டு அவர் photo வை வாங்கி வரவில்லை என்று சண்டை போட்டேன். இது எனக்கு மிகப்பெரிய வருத்தம். தாத்தா மாப்பிள்ளை photo பார்த்தேன். அவர் அந்த படத்தில் சில Japanese உடன் இருக்கிறார். எனக்கு தோனவில்லை. அவர்களிடம்photo வேண்டும் என்று கேட்க, என்று சொல்லிவிட்டார்.
அப்பா தான் சொன்னார். நீயே வந்து பார். பிடிக்கவில்லை என்றால் சொல்லு. அப்புறம் வேறு பையன் பார்க்கலாம் என்று.
அதிலிருந்து ஆரம்பித்தது என் பிடிவாதங்கள். பெண் பார்க்க பட்டு புடவை கட்ட மாட்டேன், பாட மாட்டேன் ( தெரிந்தால் தானே). நமஸ்காரம் செய்ய மாட்டேன் என்பவை சில.
என் பிறந்த நாள் April 29. அன்று தான் பெண் பார்க்க அத்தை வீட்டில் ஏற்பாடு. முதல் நாள் அம்மாவுடன் போக மறுத்து விட்டேன். மறு நாள் பாட்டியுடன் போனேன்.
மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். மாப்பிள்ளை யார் என்றே தெரியவில்லை. வந்ததில் 2 பெண்களும் உள்ளே வந்த போது தெரிந்தது 1 இவர் அம்மா, மற்றொன்று இவர் அத்தை என்று. அவர்கள் சொல்லி இவர் அப்பா வரவில்லை என்றும் தெரிந்தது.என்னை அழைத்து வந்து எல்லாருக்கும் நமஸ்காரம் செய்ய சொல்கிறார் தாத்தா. யார் மாப்பிள்ளை என்று தெரிந்தால் தானே செய்யலாம்.அந்த நேரத்தில் என்ன செய்வது? எல்லாருக்கும் செய்து வைத்தேன். அப்புறம் உள்ளே வந்து இவர் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் யார் அவர் பிள்ளை என்று.
இதில் ஒரு உண்மை... வந்ததில் ரொம்பவே smart ஆக இருந்தது Suresh Kumar தான். மாயவரத்திலிருந்து 7கி.மீஓடியே வந்தது போல தலை களைந்து இருந்தார் இவர்.
காபி, டிபன் சாப்பிட்ட அந்த நேரத்தில் அம்மாவையும், அத்தையையும் ரொம்பவே பிடித்தது எனக்கு. அவர்கள் நான் பட்டு புடவை கட்டாததை புகழ்ந்த போது மேலும் பிடித்தது.
இவர் அம்மா தான் ' உன்னுடன் என் பிள்ளை பேச வேண்டும் என்று சொன்னான், உங்கள் வீட்டில் தப்பாக நினைக்க மாட்டீர்களே' என்று கேட்டு அனுமதி வாங்கினார்.
எனக்கு தனியாக பேச இஷ்டம் இல்லை தான். இருந்தாலும் என்ன பேசுகிறார் என்று கேட்கலாமே என்று நினைத்தேன். எனக்கு தான் AGE GAP விஷயம் பெரிய திரையாக பின் மண்டையில் ஓடுகிறதே.
இவர் தான் பேசினார். ஆரம்பித்த உடனேயே கல்யாணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் தான் பெண் பார்க்க வந்தேன். அதுவும் எனக்கு இஷ்டம் இல்லை. அம்மா தான் நீ வேண்டுமானால் பார்க்க வேண்டாம். ஆனால் அந்த பென் உன்னை பார்க்க வேண்டாமா என்று கேட்டார். அதனால் தான் வந்தேன் என்று சொல்பவரிடம் என்ன பேசுவது? தன் வேலை குணாதிசயங்கள்????? எல்லாவற்றையும் பற்றி பேசினார். நானோ 1 மணி நேரத்தில் 2 வார்த்தை பேசினேன். பேச கூட இல்லை. கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். கையில் ஒரு கர்ச்சீ. அதை மடிக்க வேண்டியது. திரும்ப பிரிக்க வேண்டியது, திரும்ப மடிக்க வேண்டியது.
இதை எல்லாம் என் Cousin Jyo பார்த்துக்கொண்டு இருந்ததை பார்ப்பது.
இவர் நினைத்து இருப்பார். பொண்ணு ரொம்ப அமைதி ன்னு. கடைசியாக உனக்கு என்ன issue என்று கேட்டார். நானும் சொன்னேன் AGE GAP தான் பெரிய issue என்று.
வலையில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தெரிந்த மீன் வெளியில் போக துடிக்கும். ஆனாலும் அதற்கு தெரியும் சாவதை விட வேறு மார்க்கமில்லை என்று. கடைசி வரை முயற்சி செய்வோமே என்று தான்.
அந்த நிலையில் தான் நானும். இன்னும் கொஞ்சம் காலம் கூடவே அம்மா வீட்டில் இருக்க ஆசை. அவ்வளவே தான்.
இன்னும் வரும்....

Saturday, July 07, 2007

கதை கேளு, கதை கேளு- part-9



எனக்கு நன்றாக நினைவில் உள்ளது......


பிரசவத்திற்காக மயிலாடுதுறை போயுள்ள அம்மாவை பார்க்க வேண்டும் என்று 5 வது திருவாரூரில் படிக்கும் நான் அப்பாவை தொன தொனக்க Dec 26, 1977 அன்று அப்பா அழைத்துப் போனார்.

அம்மாவை பார்த்துவிட்டு அத்தை, அத்தான், அப்பா , அம்மா எல்லோருடன் அந்த வருடம் தீபாவளி ரிலீசான '16 வயதினிலே' நைட் ஷோ பார்த்துவிட்டு அடுத்த நாள் காலை திருவாரூர் போனேன்.


என் தங்கை 28 Dec பிறந்தாள்....


ஸ்ரீ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமே....


தவறாமல் நாங்கள் வைத்த பெயர் ஸ்ரீதேவி....

செல்ல பெயர்...... "மயிலு......"


குண்டு அழகு பாப்பாவை பெரிய அக்கா வான நான் போய் பார்த்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது.

பிறந்த 11வது நாள்


இங்கு என் அப்பாவின் குமாஸ்தா தாத்தா வுடன்






அவள் சின்ன வயதில் அவளுடன் நான் அதிகம் இல்லை.





படிப்பு முடிந்து நான் வீட்டிற்க்கு வந்த போது அவளை ஹாஸ்டலில் அப்பா சேர்த்து விட்டார்.





மதுரையிலிருந்து நான் சென்னைக்கு வந்ததிலிருந்து (அவளுக்கு கல்யாணம் ஆனாலும்) இன்று வரை நான் தான் அவளுக்கு local guardian.





கலாக்ஷேத்ராவில் அவள் இருந்த போது மதியம் சாப்பாடு இடைவேளையில் தோழியுடன் என் வீட்டிற்க்கு வந்து விடுவாள்.





எனக்கு முதல் குழந்தை அவள்.





என் போல் ஸ்ரீராம் இல்லாமல் கொஞ்சம் அறிவு, சாமர்த்தியம் கோபம் ஜாஸ்தி உண்டு தேவிக்கு.





எதிலும் தன் வழியை தேர்ந்து எடுத்து அதில் உறுதியாக இருப்பவள்.





எங்கள் குடும்பத்தின் முதல் Masters பட்டம் பெற்ற பெண்.





தனக்கு தகுந்த சரியான துனையையும் தானே அமைத்துக்கொண்டு இன்று சந்தோஷமாக வாழ்பவள்.



இவள் இல்லையென்றால் எனக்கு ஒரு கை உடைந்தது போல.

இவள் US போன 1 வருடமும் எனக்கு எதோ ஒன்று இல்லாதது போன்ற வெறுமை தான்.

தினம் என் முகத்தை webcam ல் பார்க்கவில்லை யென்றால் உடனே இந்தியா வந்து விடுகிறேன் என்று அழுது ஒரு போன் வரும்.

எனக்கும் அப்படி தான்.

என் மகளிடம் இவளுக்கு தனி அன்பு. அவளுக்கும் தான். ஒரு வாரம் சித்தியை பார்க்காமல் இருந்ததில்லை ஸ்ரீநிதி.
ஸ்ரீநிதி யை பார்க்காமல் 10 நாள் இருந்தால் ...... அழுகை தான் தேவிக்கு.

US ல் இருந்த போது webcam லேயே பாடங்கள் நடக்கும் ஸ்ரீநிதிக்கு.

இப்பொழுது தனக்குள் ஒரு உயிரை சுமந்து கொண்டு இருப்பவள்.

அடுத்த பதிவில் ...........

என் தைவான், தாய்லாந்து பயன அனுபவங்கள்....

கதை கேளு -part 8


வந்துட்டேன்!!!!!!!!

ஒரு வழியா கிருஷ்ணாவை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு,ஸ்ரீநிதி யும் புது ஸ்கூலில் செட்டில் ஆயாச்சு. இனிமேல் கொஞ்சம் relaxed ஆக இருக்கலாம்.

இன்றைய பதிவில் என் தம்பி யைப்பற்றி......

ஸ்ரீராம் ..........



ராமர் பிறந்த வேளையில், ராமர் பிறந்த அன்றே பிறந்தவன்.

வீட்டின் ஸ்பெஷல் குழந்தை. தாத்தாவின் செல்லம்.

எனக்கு நல்ல friend. இது இப்பொழுது தான். சின்ன வயதில் நாங்கள் சேர்ந்து 1 minute இருந்தால் கூட சண்டை தான்.

அடி, உதை சண்டை தான் எப்பொழுதும்.

அவன் 5 வயதில் நான் பாட்டியின் வீட்டிற்கு படிக்க போய் விட்டேன். நான் மறுபடியும் அம்மா வீட்டிற்க்கு 8 வது படிக்க வந்த போது அவன் அத்தை வீட்டில் படிக்க போய் விட்டான். அதற்கு மேல் நான் ஹாஸ்டலில். அவனும் 8 வது படிக்க ஹாஸ்டலுக்கு. அதற்கு பிறகு தான் அவன் மேல் பாசம் வந்திருக்க வேண்டும் எனக்கு.

சின்ன குழந்தைகள் விஷமம் செய்யும். ஆனால் இவனைப் போல் யாருமே இல்லை.

என் அம்மாவின் சமையல் பாத்திரங்கள் பாதி திருவாரூர் கமலாலயத்தில் கிடக்கிறது. உடையும் வகைகளுக்கு இவன் கையால் மோட்சம் கிடைத்து விட்டது.
அதும் பால் குடிக்கும் பாட்டில்.. முன்பெல்லாம் கண்ணாடி பால் பாட்டில் தான் உண்டு.

இவன் உடைத்த பாட்டில்களுக்கு கணக்கே கிடையாது.

வீட்டில் இவனை சமாளிக்கவே 1 ஆள் வேண்டும்.

பிடிவாதமும் நிறைய உண்டு. அந்த காலத்தில் stretchelon material ல் Half pant வரும். அதை தவிர வேறு ஏதும் போட மாட்டான் இவன். ஒரு முறை அம்மா, அப்பா இன்னும் சில பேர் ஒரு function க்காக கோயம்புத்தூர் போகையில் வழியில் திருச்சி பஸ்ஸ்டாண்டில் இவன் சட்டைகள் வைத்த பெட்டி காணாமல் போய் விட கோயம்புத்தூரில் மறு நாள் காலை கடை திறக்கும் வரை ஒன்றுமே போடாமல் நின்றவன். நல்ல வேளை. அப்போ அவனுக்கு வயது 3.


பொறுப்பு & பொறுமை என்னை விட அதிகமாகவே இருக்கும் ஆத்மா இவன்.


Jack of all trades...


இவனுக்கு தெரிந்த சில கலைகள்.....


மிருதங்கம், drums, bagpiper, வில்லுப்பாட்டு,கொஞ்சம் கர்ணாடக சங்கீதம்..

இளையராஜாவின் தீவிர ரசிகன்....


எழுத்தாளர் சுஜாதா வின் பக்தன்...


உலகில் எந்த விஷயத்தை பற்றியும் தெரிந்து வைத்துக்கொண்டு பேச முடியும் இவனால்...


இன்று திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளின் தந்தை....


எங்கள் நிறுவணத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு அயராது உழைத்து வரும் அதிகாரி..


எனக்கு நம்பிக்கை நட்சத்திரம்.....

அடுத்த பதிவில் என் தங்கை........

Friday, April 06, 2007

கதை கேளு - part-6


அப்பா.....

J.Ganesan BSc, BL, Advocate

அடடே ... இந்த படத்தை ஏன் முதல்ல போட்டேன்னா..........
கீழே படிங்க......

" டேய் குழந்தை யை முதன் முதலா பாக்க போகும் போது ஏதாவது பொம்மை வாங்கிண்டு போ" என்று நண்பர்கள் சொல்ல, நான் பிறந்ததும் அப்பா எனக்கு வாங்கி வந்த பொம்மை. ' காகம்' yeah!!! it was a crow.......couldn't have got a better toy to play with.........
2 வயதில் ஒரு நாள் தூங்கி எழ்ந்த போது என்னை கை பிடித்து தூக்கி விடுகிறேன் என்று கை நுனியில் பிடித்து தூக்கி, என் முழங்கையை உடைத்தவர். 'அப்பா, அப்போதிலிருந்து என் முழங்கை கோணல் தான்'
சின்ன வயதிலிருந்தே எனக்கு English Literature மேல் ஒரு மிகுதியான ஈடுபாட்டை வளர்த்தவர். அதற்க்காண பயிற்சியும் கொடுத்தவர்.
நான் 2 ம் க்ளாஸ் படித்த போதிலிருந்து தான், நினைவுகள் இருக்கிறது. அப்பொழுது எங்கள் ஜாகை திருவாரூரில். நன்னிலத்தில் கோர்ட் கிடையாது. அப்பா காலையில் நாங்கள் ஸ்கூல் போனபின் லேட்டாக எழுந்து குளித்து, கோர்ட் போய் வந்து, சாப்பிட்டு கிராமத்திற்கு போய் விடுவார்.
இரவு நாங்கள் தூங்கிய பின் திரும்ப வந்து படுப்பார். சனி, ஞாயிறு கிழமைகளில் வீட்டில் இருப்பார். எங்களை நன்னிலம் பைக்கில் கூட்டிக்கொண்டு போவார். அம்மா பஸ் ஸில் வருவார்.
ஃப்ரெண்ட்ஸ் நிறையவே உண்டு அப்பாவிற்கு. என் 10 வயதில் என் தங்கை பிறந்த போது எனக்கு முதன் முதலாக செய்தி சொன்னவர்.
9வது படிக்கும் போது என்னை கொண்டு போய் திருச்சியில் ஹாஸ்டலில் சேர்த்தார். எப்பாடு பட்டாவது அந்த ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்து 'உருப்படாமல்' போக என்ன வழி என்று யோசித்து நான் நடத்திய பல நாடகங்கள் நிறைவேராமல் தடுத்தவர்.
ஒரு முறை 'கடுமையான வயிற்று வலி' என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லியதும், அன்று மாலையே திருவாரூரிலிருந்து பைக் கில் வந்தார்.
"ஆஹா.... என்ன ஒரு அருமையான மனிதர்.... பெற்ற பெண்ணுக்கு கஷ்டம் னு சொன்னவுடன் அவளை அழைத்து போக உடனே வந்து இருக்கிறார்" னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க.
அவர் வந்தது டாக்டரான என் சித்தப்பாவுடன். அங்கேயே வைத்தியம் பார்த்து, மாத்திரை கொடுத்து விட்டு போனார்.
அப்படியாக என்னை கொஞ்சமாவது வாழ்க்கையில் தேற வைத்தவர்.
அப்பாவின் கோபம் பொல்லாதது. அது எனக்கு நன்றாகவே தெரியும்.
10 வதில் ஏதோ சுமாராக 78% வாங்கி பாஸ் செய்து விட்டேன். அடுத்தது +2. இதில் எனக்கு பிடித்த பாடங்களான sanskrit, english, advanced english எடுத்தாலும் கூடவே physic, chemistry and maths எடுத்து படித்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு.
என் ஊரிலிருந்து அப்பாவின் நன்பர் மகளும் இந்த ஹாஸ்டலில் படித்தாள். அவள் science with maths க்ரூப். பொதுத்தேர்வு முடிவுகள் வரும் வரை எனக்கு கொஞ்சம் பயம் தான். ரிஸல்ட்ஸ் வாங்க எங்கள் 2 பேரையும் அழைத்து போனார் அப்பா.
மார்க் வாங்கிய பின் அவர் முகம் போன போக்கை இன்றளவில் என்னால் மறக்க இயலாது. என்ன விஷயம் என்றால், அந்த பெண் மார்க் - 1067/1200
நான் சரி பாதி - 657/1200. கோபம் வரத்தானே செய்யும். ஆனால் அவருக்கு தெரியும் எதில் அதிகம் வேண்டுமோ அதில் நான் நிறைய எடுத்துள்ளேன் என்று. அது போதுமே காலேஜில் சேர.
அவளும் சேர்ந்தாள் 'அவினாசிலிங்கம்' கல்லூரியில். என்ன ப்ரயோஜனம்? படிப்பை முடிக்க வேணாமா? அதுக்குள்ளே கல்யாணம் செஞ்சுட்டாங்க வீட்டில்.
நான் படிப்பை முடிச்சுட்டேன். அது தானே முக்கியம்???
"அப்பா, என்னை BL படிக்க வை" னு நான் அவரிடம் கேட்டேன். பாட்டி தான் பயம் காட்டறாங்களே. அவங்க பேச்சை கேட்க வேண்டியதா போச்சு அவருக்கு. எனக்கும் கல்யாணம் செய்து வைத்து விட்டார். அவருக்கு பேரண், பேத்திகளை சீக்கிரம் பார்க்க ஆசை.
கஷ்ட படுறது நாம தானே?
இவ்வளவு இருந்தும் career ல் கவணம் அதிகம் உண்டு அவருக்கு. திருவாரூரிலிருந்து நன்னிலம் வருவதாக முடிவு செய்ததே நன்னிலத்தில் Magistrate & Munsif கோர்ட் வந்த பிறகு தான்.
தாத்தா, பாட்டிக்கும் வயதாகி வந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். கோர்ட் நன்னிலத்தில் திறக்க அவர் எடுத்த முயற்ச்சிகள் ஏராளம். இதற்கு நடுவில் தீவிர விவசாயம் வேறு.
ஆனாலும் அவருடைய முகத்தில் சோர்வு இருந்ததில்லை. அம்மாவுக்கு தப்பாத பிள்ளை தான்.
என் personal life ல் எனக்காக நிறைய தியாகங்கள் செய்தும் இருக்கிறார். " Sorry paa......You dont deserve this at all.."
So.... இனி இருக்கும் வரை அப்பாவுக்கும், அவர் மரியாதைக்கும் கேடு வராமல் இருப்பதற்க்கான முயற்ச்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

Tuesday, April 03, 2007

கதை கேளு - part 5


எங்கள் ஊர்.........
நன்னிலம்........


திருவாரூரிலிருந்து 16 kms தொலைவில் இருக்கும் டவுனும் இல்லாமல், கிராமமும் இல்லாத ஊர். இந்த பகுதியில் எல்லோருக்கும் தெரிந்த ஊர். முன் காலத்திலிருந்து ஒரு பெரிய பஞ்சாயத்தாக இருந்து வரும் ஊர்.


என் தாத்தாவின் அப்பா வந்து குடியேரிய ஊர். எங்களுக்கு சொந்தமான வயல்கள் எல்லாம் 5kms தள்ளி 'பூங்குளம்' என்ற ஊரில் இருந்தாலும், 'ரைஸ் மில்" நன்னிலத்தில் தான் இருக்கிறது.'TWIN CITIES' போல் இதுவும் 'TWIN TOWNS'.
'முடிகொண்டான் ஆறு' நடுவில் ஓட ஆற்றின் தெற்கே 'நன்னிலம்' வடக்கே 'நல்லமாங்குடி'. ஸ்கூல், பஸ் ஸ்டாண்ட், பாங்க், கடைத்தெரு, ஆஸ்பத்திரி இப்படி எல்லா அத்தியாவசிய தேவைகளும் அக்கரையில் நன்னிலத்தில் இருக்க, நாங்கள் இருப்பதோ, இக்கரையில் நல்லமாங்குடி யில்.


எங்கள் பகுதியில் தான், PWD ஆபீஸ், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் இப்படி எல்லாம் உள்ளது. எங்கள் வீடு இருப்பது அக்ரஹாரத்தில். இயக்குனர் சிகரம் K.பாலசந்தர் எங்கள் தெருக்காரர் தான். தெருவின் இரு பக்கமும் பிள்ளையார் மற்றும் பெருமாள் கோயில்கள். எங்கள் வீடும், பெரிய தாத்தாவின் வீடும் பக்கத்தில் ஒரே மாதிரி
இருக்கும்படி கட்டப்பட்டது. நாயன்மார்களால் பாடப்பட்ட 'மதுவனேஸ்வரர்' திருக்கோயில் (மேலே உள்ள படம்)

நன்னிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரை சுற்றி

நிறைய புகழ்பெற்ற கோயில்கள் உண்டு. என் சின்ன வயது அனுபவங்கள் எல்லாம் வருடா வருடம் கோலாகலமாக 10 நாட்கள் நடக்கும் ராமநவமி உற்சவம், மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, தான்.

மற்றபடி எங்கள் வீடு தான் எனக்கு உலகம். 'ஓடியன்' தியேட்டரில் MGR சினிமா ஸ்பெஷல். அதே போல் இப்பொழுது போல் இல்லாமல், ஆற்றங்கரையில் கோடையில் சின்ன பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இருங்த போது என் cousins மற்றும் friends உடன் போய் விளையாடியது மறக்கமுடியாது. ஆற்றில் தன்ணீர் வரும் காலத்தில், ஆடி 18 ன் போது பட்டாச்சாரியாரிடம் கொடுத்து செய்த பெரிய 'சப்பரம்' கொண்டு போய் விளையாடி, உண்ட நியாபகங்கள் நிறைய. சைக்கிள் கற்றுக்கொண்டு, வாடகைக்கு சின்ன அளவு சைக்கிள் எடுத்து, தினம் 2 மணி நேரம், சுற்றி இருக்கிறேன்.


இன்றளவில் இங்கே எங்கள் வீட்டில் தூக்கம் வருவது போல் எங்கேயும் வருவது இல்லை எனக்கு. அப்படி ஒரு secured feeling.


நன்னிலத்தில் எனக்கு பிடித்த
சில சமாச்சாரங்கள், 1. சின்ன வயதில் ஸ்கூல் விட்டு வரும் வழியில் பாட்டி கொடுக்கும் 5 பைசா விற்கு ஐஸ் ஃபாக்டரியில் கொடுக்கும் ஆரஞ்சு கலர் ஐஸ். 2. இப்பொழுதும் கிடைக்கும் வருத்த உப்பு நிலக்கடலை. 3. என் அம்மா வீட்டில் கிடைக்கும் கறந்த பசும்பால். 4. ஃப்ரெஷ் தண்ணீர் மற்ரும் காற்று.


ஊரைப்பற்றி நிறைய எழுதுவதற்கு இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவே.


அப்பா....... இவரைப்பற்றி அடுத்த பதிவில்........

Saturday, March 31, 2007

கதை கேளு - part 4

அம்மாவின் அப்பா மற்றும் அம்மா,

MVV தாத்தா, லக்ஷ்மி பாட்டி,

முதல்ல பாட்டி ன்னு சொன்னதுக்கு வாங்கப்போகிறேன் நான். மன்னியம்மா ன்னு தான் கூப்பிடனும் என் அம்மா வை பெற்ற பாட்டியை. பாட்டி னு கூப்பிட்டா அப்படி ஒரு கோபம் வரும் அவருக்கு.

MVV(M.V.Venkataraman) தாத்தா க்கு பட்டுக்கோட்டை பக்கத்தில் ஒரு ஊர். பெயர் 'மண்ணங்காடு'. கடற்கரை யிலிருந்து 3-4 KM இருக்கும். தென்னை, மா, பலா மரங்கள் நிறைய உண்டு. இவருக்கும் விவசாயம் தான் தொழில். இவரின் முன்னோர் தஞ்சாவூர் ராஜா வின் அரசவையில் மந்திரி யாக பதவி வகித்துள்ளனர். அப்போது ராஜா கொடுத்தது தான் இதையும் சேர்த்து 10 ஊர். பிராமிணர்கள் அதிகம் வாழாத பகுதியும் கூட. தாத்தா வின் பக்கத்து ஊரான 'துவரங்குறிச்சி' தான் நம் முன்னால் ஜனாதிபதி 'R.VENKATARAMAN'. தாத்தா Metric வரையில் படித்தும் இருக்க்கிறார். கை வேலை செய்வதில் தேர்ந்தவர். அதிலும் தச்சு வேலை நன்றாகவே செய்வார். எனக்கு தெரிந்து இவரே செய்து கொடுத்த dressing table தான் என் அம்மா, மற்றும் சொந்தங்களிம் உள்ளது.வ்யாபகம் கொஞம் அதிகம் இவருக்கு. மைக் இல்லாமலேயே கூட்டங்களில் பேசக்கூடிய குறள். அவர் ஊரில் 7-8 மாந்தோப்புகள் & 2-3 பலா தோப்புகள் இவருக்கு உண்டு. விடுமுறை நாட்களில் நாங்கள் அங்கு போகும் பொழுது எங்களையே தன்னுடன் அழைத்து போய் வேணும் வகைகளை பறித்துபழுக்க வைத்து தருவார். எவ்வளவு காய்கள் காய்த்தாலும் விலைக்கு ஒன்று கூட விற்க மாட்டார். சொந்தங்களுக்கு கொடுத்து விடுவார். வாழ்க்கையை ரொம்ப சுவாதீனமாக, மிகுந்த அலட்டல் இல்லாமல், போகும் போக்கிற்கு விட்டு, எல்லாவற்றையும் துனிச்சலுடன் எதிர்கொண்டு வாழ்ந்தவர். தன் கடைசி காலத்தில் என் கூட என் வீட்டில் இவரும், மன்னிம்மா வும் தங்கியது எனக்கு சந்தோஷம்.

மன்னியம்மா:-

இவரை பற்றி சொல்ல என்ன இருக்கிறது என்று அம்மா கேட்டார் இன்று. ஏன் இல்லை? உடுமல்பேட்டை பக்கத்தில் 'கொழுமம்' என்னும் ஊரில் ஒரு ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். செல்வ செழிப்போடு வாழ்ந்த குடும்பம். உலக அறிவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் அண்பு 200% உண்டு. எனக்கு ஓவராக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்து இருப்பதாக இன்றளவில் என் அப்பாவிற்கு இவர் மேல் வருத்தம் உண்டு. என் 4 வயது வரை இவர் இடுப்பிலிருந்து என்னை இறக்கியதில்லை. வீட்டு வேலைகளும் அவ்வளவாக கற்காதவர். எல்லோருக்கும் இவரை பிடிக்கும். நாங்கள் பேத்தி, பேரன்களை கண்டால் தலை கால் புரியாது. எங்களோடு நாங்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும் சமமாக கலந்து கொள்வார். 4 குழந்தைகள் பெற்று அவர்களுக்கே பேத்தி, பேரன்கள் இருந்தும் இன்னமும் ஒரு குழந்தையாகவே வாழ்பவர். மீண்டும் என்னுடன் வ்ந்து இருக்கும்படி கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன் இவரை.


என் ஊர்............................. இதை பற்றி அடுத்த பதிவில்....

Friday, March 30, 2007

கதை கேளு - part 3

தாத்தா.....

VKJ தாத்தா....

போன பதிவில் என் பாட்டி பெயர் கொடுக்க மறந்து விட்டேன். அவர் பெயர் அவயாம்பாள். மயிலாடுதுறையில் பிறந்ததால் அந்த ஊர் அம்பாள் பெயர். தாத்தா பெயர் ஜானகிராம ஐயர்.
உங்களில் யாருக்காவது உங்கள் தாத்தாவிற்கு 4-5 தலைமுறை முன் வாழ்ந்த தாத்தாக்கள் பெயர் தெரியுமா?? எங்கள் குடும்பத்தாருக்கு தெரியும். கடந்த 200 தலைமுறை யாக வாழ்ந்தவர் எல்லோர் பெயரையும் எழுதி
வைத்து இருக்கிறார்கள் எங்கள் குடும்பத்தில். முன் காலத்தில் மதுரையை ஆண்ட 'ராணி மங்கம்மா' வின் அரசவையில் உயரிய பொருப்பில் இருந்து இருக்கிறார்கள் தாத்தாவின் முன்னோர். அவருக்கு சொந்த ஊர் 'ஸ்ரீவில்லிபுத்தூர்'
அருகில் 'ஆதனூர்'. தாத்தாவின் அப்பா பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தன் ஊரிலிருந்து பெயர்ந்து வந்து சோழ நாட்டில் தன் உழைப்பால் கால் ஊன்றி இன்று வரை நாங்கள் அனுபவிக்கும் செல்வங்களை சேர்த்து வைத்தவர். தாத்தா சிறுவனாக இருந்த போதே அவர் அப்பா காலமாகிவிட்டார். சிறு வயதில் தன் அண்ணன் நிழலுக்குள் இருந்து கொண்டு எல்லா வேலையும் கற்றவர். கூடுதலாக ஆண்மீகத்திலும், காஞ்சி சங்கர மடத்தின் மீதும் ஈடுபாடு. அதிலும் 'பரமாச்சாரியார்' மீது தீவிர பக்தி. 'பரமாச்சாரியார்' எங்கு எப்போது வெளியூருக்கு போணாலும் அவர் கூட இவரும் நடை பயணமாகவே போய் இருக்கிறார். தாத்தா ஒரு தீவிர விவசாயி யும் கூட. 2 வேளையும் தவராமல் தானே நிலங்களை போய் பார்த்து வருவார்.
எனக்கு சின்ன வயதில் தாத்தா என்றால் சிம்ம சொப்பனம். வீட்டில் ரகளை எல்லாம் அவர் இல்லாத போது தான். வில் வண்டி தெரு முனை வரும் சத்தம் கேட்டாலோ எல்லாம் அடங்கி விடும்.வயது ஆக ஆக தான் அவர் மீது ஒரு மரியாதை, அன்பு எல்லாம் வந்தது. தாத்தா வுக்கு வீட்டின் எந்த விஷயம் ஆனாலும் அதை 'பரமாச்சாரியார்' இடம் சொல்லி
விட்டால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஒரு முறை நான் படித்து வந்த பள்ளியின் ஹாஸ்டலில் அடுத்த வருடத்திற்க்கு இடம் நிராகரிக்கப்பட்ட போது கவலையுடன் இந்த விஷயத்தை பெரியவரிடம் சொல்லி இருக்கிறார். இதை கேட்டு கொண்ட 'பரமாச்சாரியார்'உம், 2 நாட்கள் சென்று
அந்த ஸ்கூல் நிருவணர் அவரை பார்க்க வந்த போது கேட்டு இடம் வாங்கி கொடுத்தும் உள்ளார். தாத்தா வின் 'பக்தி' அவ்வளவு.
தாத்தா சிவ பூஜை செய்யும்போது யாரும் பேச கூடாது வீட்டில். அவரும் மணிக்கணக்காக பேச மாட்டார். தாத்தா எனக்கு தெரிந்து இன்று வரை சுடு தண்ணீரில் குளித்தது இல்லை. மார்கழி மாத பூஜைக்காக 2AM எழும் போதும் பச்சை தண்ணீர் தான். தன் வாழ்க்கையை ஒரு தவம் போல் வாழ்ந்து வருபவர்.
பாட்டிக்கும், தாத்தாவுக்கும் சண்டைகள் வரும் தான். ஆனாலும் பாட்டி சொல்லாமல் தாத்தா எதும் செய்ததில்லை. பாட்டியின் மறைவுக்கு பிறகு அவருக்கு கொஞ்சம் தொய்வு தான். 90 வயது ஆகிறது அவருக்கு.

என் அம்மாவைப்பெற்ற தாத்தா, பாட்டியை பற்றி அடுத்த பதிவில்.............

Thursday, March 29, 2007

கதை கேளு- part 2

பாட்டி,
எனக்கு அம்மாவுக்கும் மேல்.
இது அம்மாவுக்கும் தெரியும்.
தமிழில் ஒரு வார்த்தை உண்டு, 'ஆளுமை' என்று. இதற்க்கு 'domination' என்று பொறுள் ஆங்கிலத்தில். பாட்டியும் ரொம்பவே dominant தான்.மயிலாடுதுறை அருகே 'அரயபுரம்' கிராமம் பாட்டி ஊர். அவர் அப்பா மயிலாடுதுரையில் புகழ் பெற்ற வக்கீல். வசதி யான குடும்பம் தான். புகுந்த வீட்டில் மாமியார், மாமனார் இல்லை. பெரிய மைத்துனர் குடும்பம் தான். ஆணால் பாட்டி வந்ததோ'enlarged heart' என்னும் தீரா வியாதியுடன். இடம், பொருள், ஏவல் புரிந்து செயல் படும் புத்தி கூர்மை, அபார நினைவுத்திரன், ஆட்களிடம் வேலை வாங்கும் திரண், இவை பாட்டியின் சில குணங்கள். காசு சேர்ப்பதில் கெட்டி. எந்த காரியம் செய்தாலும் அதில் நிரைவு இருக்கும். எப்போதும் புதுமைகளை யார் செய்தாலும் கேட்டு தெரிந்து கற்ப்பவர். சோம்பல் என்ற வார்த்தையே இருக்காது அவரிடம். பாட்டி எழுந்து வீட்டு வேலை எல்லாம் செய்து நான் பார்த்ததே இல்லை. தன் 35வது வயதிலிருந்து உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர். எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து தான். வீட்டுக்குள் தான் நடை. பொருள் வாங்க கடைக்கு ஆள் அனுப்பினால் எந்த கடை, எங்கே இருக்கும் என்று சொல்லி அனுப்புவார். இது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால், கடைத்தெருவுக்கே போகாதவர் சொன்னால்?பாட்டியிடம் கடுமை நிரையவே உண்டு. நான் பாட்டியின் கூட இருந்து படித்தது 2 வருடங்கள். 2 வருடமும் ஒரு MNC கம்பெனியின் executive போல் டைட் schedule. காலையில் கட்டாயம் 6 மணிக்கு எழும்ப வேண்டும். இல்லையென்றால் தலையில் வாளி நிறைய தண்ணீர் கொட்டப்படும். ஸ்கூல் முடிந்து திரும்பினால் ஸமஸ்கிருத க்ளாஸ், ஸ்லோக க்ளாஸ் இப்படி எல்லாம். 4 மாதத்துக்கு ஒரு முறை தான் சினிமா. எனக்கு தெரியும் பாட்டியின் செல்லம் என் அத்தை பையன் தான். அடுத்த இடம் எணக்கு.
எங்கள் குடும்பத்தில் பாட்டிக்கு சொல்லாமல் எதும் நடக்காது. நான் படித்து முடித்து வந்தவுடன் தன் உடல் நிலை காரணம் சொல்லி உடணே எணக்கு திருமணம் முடித்து விட்டார். அது நடந்தது 88' ல். பாட்டி மறைந்தது 2003' ல்.
என் 2 பிள்ளைகளையும் பார்த்து விட்டு தான் மறைந்தார். சமையல் அறையில் ஒரு இடத்தில் உட்கார்ந்த வாரே வீடு முழுக்க சமாளித்து விடுவார்.
மார்கழி மாதமானால் தானே வந்து முதல் நாள் போட்டு பார்த்த கோலத்தின் புள்ளிகளை வைத்து கொடுத்து விட்டு போவார். நாங்கள் கோலம் போட வேண்டும். புதிதாக யார் எந்த கோலம் போட்டாலும் அதை அன்றே கற்று விட வேண்டும். அதே போல் தான் சமையிலிலும். புதிதாக என்ன, யார் சமைத்தாலும் அதை செய்முறை வாங்கி செய்து பார்த்து விட வேண்டும்.பாட்டிக்கு தெரியாத கும்மி பாட்டுக்கள் இல்லை. எல்லாவற்றையும் ராகத்துடன் பாடுவார். இதை எல்லாம் தனி தனியே நோட்டு புக் போட்டு எழுதியும் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கணக்கு தவராமல் எழுதுவது, ஒரு டைரியில் தனியே அவரவர்களுக்கு கொடுக்க வேண்டிய, வர வேண்டிய கணக்கு தவறாமல் வைத்து இருப்பது அவருடைய குணம். இதற்க்கும் மேல் தனக்கு அப்புறம் என் அம்மா, பண்டிகை நாட்களில் யார் யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், யார் வீட்டு கல்யாணத்தில் எவ்வளவு மொய் இட வேண்டும் என்று எழுதியும் வைத்து இருக்க்கிறார். மல்லிகை பூக்கும் நாட்களில் எனக்கும் என் அத்தை பெண்ணுக்கும் ஜடை வைத்து பின்னல் தைத்து, அதை திருவாரூர் போட்டோ ஸ்டூடியோவில் போய் படம் பிடித்து கொண்டு வருவார்.அவ்வளவு organised. எளிதில் யாரையும் நம்பியும் விட மாட்டார். வெளியூருக்கு சென்றால் எண்ணி துனி மனிகள் எடுத்து வைத்து, திரும்ப ஊருக்கு கிளம்பும் போது எண்ணி pack செய்வார். துனி காயவில்லை என்றாலும் ஈரத்தையே தனியாக pack செய்துவிடுவார்.
எந்த நேரமும் பாட்டியை அழுக்காகவோ, தலை களைந்தோ பார்க்க முடியாது. எப்போதும் அப்படி ஒரு பளிச்.
என்னுடன் வந்து அவர் இருந்தது நான் மதுரையில் இருந்த போது தான். அப்போது எணக்கு திருமணம் ஆகி 4-5 மாதங்கள் தான். அதற்க்கே பெருமை பிடிபடவில்லை பாட்டிக்கு. அதிலும் மீணாக்ஷி கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போனதில் ஏக சந்தோஷம். மீணாக்ஷி கோயில் வாசலில் மல்லிகை கட்டு விற்பவரிடம் எப்படி அடர்த்தியாக கட்டுவது என்று கற்றுக்க்கொண்டு தான் வந்தார்.
உலகத்திலேயே நான்(வித்யா) மட்டும் தான் குழந்தை, மற்றவர்கள் எல்லாரும் பெரியவர்கள் என்ற எண்ணம் அவருக்கு. இது என் தம்பி தங்கையும் சேர்த்து. தன் உடல் நிலையால் 3-4 வருடங்கள் 30- 40 pulse/min லேயே வாழ்ந்தார். செயர்கையாக pace maker வைத்துக்கொண்டு 6 வருடம் வாழ்ந்தார். அதில் 3 வருடம் படுக்கையில். என் அப்பாவிடம் " ஒரு ஊருக்கும் என்னை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்து விடாதே. நான் இந்த ஊரிலேயே போறேன். ஐஸ் பொட்டிலயும் வெச்சுடாதே, உடனே எடுத்து விடு" என்றவர். மறைவதற்கு 2 நாட்கள் முன்பு என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி, நான் போக இயலாததால், எனக்காக ஐஸ் பெட்டியில் இரவு முழுதும் கிடந்தவர்.

தாத்தா......

இவரைப்பற்றி அடுத்தது

Wednesday, March 28, 2007

கதை கேளு! கதை கேளு!!

" என்னடா கொழந்த பாப்பா வையே பாத்துண்டே இருக்கே?" தொட்டிலில் கிடக்கும் 4 மாத பாப்பாவை பார்த்துக்கொண்டு இருந்த 4 வயது சிருவனை கேட்டார் தாத்தா. சிருவன் அம்மா, அப்பா, 10 வயது அக்கா, மாமா மற்றும் மாமியுடன் அந்த கிராமத்திற்கு வந்துள்ளான். பாப்பா மாமியின் அண்ணன் மகள். பிள்ளை பெற்று புகுந்த வீட்டிற்க்கு முதல் முறையாக வந்தவுடன் சொந்தங்களை அழைத்து தொட்டில் போடுவது தஞ்சாவூர் ஐயர் வீடுகளில் இன்றும் இருக்கும் வழக்கம். இதற்க்கு தான் சிறுவனும் வந்துள்ளான். மாமா பையணிடம் " ஏய்! பாப்பா எவ்ளோ அழகா இருக்கு பாத்தியா? அந்த தாத்தா கிட்ட போய் பாப்பாவை எனக்கு கல்யாணம் செஞ்சு தரேளா தாத்தா? னு கேளு" என்று சொல்லி தர, சிறுவனும் அவ்வண்ணமே கேட்டான். தாத்தா சொன்னார் " எனக்கு ஒன்னும் இல்ல டா கொழந்த, நாளைக்கு பெரியவள் ஆன அப்புறம் என் பேத்தியோ பால் வெள்ளை, உண்ணை கறுப்பா இறுக்கான் னு சொன்னா என்னடா செய்வேன்?" னு சொன்னதும் பையனுக்கு கொஞ்சம் முகம் தாழ்ந்தது. இருந்தாலும் சுதாரித்து கொண்டு " தாத்தா நான் நிறைய சோப் போட்டு குளித்து அதுக்குள்ள வெள்ளையா ஆகிடுறேன்" னு சொன்னான். இதை கேட்டவுடன் எல்லாரும் சிரித்தார்கள். சிரித்தவர்களுக்கு அப்போ தெரியவில்லை நிஜமாகவே இந்த பையனும் பெண்ணும் தான் சேர்ந்து வாழ போகிறவர்கள் எண்று.

சிறுவன் = என் அப்பா, பாப்பா = என் அம்மா.

அந்த காலத்தில், குறிப்பாக ப்ராமண சமூகத்தில், பால்ய விவாகம் தான் செய்வார்கள். பெண்ணாக இருந்தால் 10, 12 வயதுக்குள் கல்யாணம், பையனுக்கும் 15, 16 க்குள். தாத்தா காஞ்சி மடத்தில் பொறுப்பான பதவியில் இருந்த போதிலும், தொழில் என்னவோ ரைஸ் மில் தான். இதன் கூட காவிரி டெல்டா வில் விளை நிலங்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு என் அத்தைக்கு வரண் தேடியதில் தாமதம். அத்தை க்கு வயது 16 ஆகி பூப்படந்தும் விட்டார். தாத்தா வுக்கு 'கண்ணிகா தான" in the real sense, எண்ணம் பலிக்கவில்லை.சரி 'கண்ணீகா தானம்' வாங்கவாவது செய்யலாமே என்று தெரிந்த இடமான மைத்துனரின் மைத்துனர் மகள், என் அம்மா வை மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
அம்மா பிறந்த ஊரில் மா, பலா மரங்கள் ஏராளம். அம்மாவுக்கு விளையாட்டே மா மரத்தின் மேல் ஏறி மாங்காய்கள் பறிப்பது தான். என் அம்மா சொல்வார், "கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி தான் ரோடிலே போய் விளையாடுவதை நிருத்தினேன்" என்று. அம்மாவின் தோழர்கள் யார் தெரியுமா? அப்பாவின் மாமா பையன், அம்மாவுக்கும் அத்தை பையன் தானே, அப்பாவின் சித்தி பையன், பெண் இப்படி எல்லோரும்.
1 வாரம் நடந்ததாம் கல்யாணம். அம்மாவை அழைத்துக்கொண்டு என் அப்பாவின் ஊருக்கு போய் சேர்ந்து 1 நால் கூட ஆகவில்லை. திரும்பவும் பெண்ணை பெற்றவர்களுக்கு அழைப்பு வந்து விட்டது. "பெண் பெரிய மனுஷி ஆகிவிட்டாள், வாருங்கள்" என்றூ. மீண்டும் அமர்க்களம். கொண்டாட்டம். அப்பா வழக்கம் போல் படிக்க சென்னை க்கு போய் விட்டார். அம்மா புகுந்த வீட்டிலேயெ private tuition ல் தொடர்ந்து படிப்பார். லீவுக்கு அப்பா வரும் நாட்களில் தன் அம்மா வீட்டிற்கு போய் விடுவார். அம்மாவும் இப்படியே SSLC வரை பாஸ் செய்து விட்டார். அப்பா காலேஜ் முடித்து வக்கீலுக்கு படிக்க ஆரம்பித்து விட்டார்.
அப்பாவின் 23 வது வயதில் நான் பிறந்தேன். அம்மாவுக்கு 19 வயது.

பிறந்த ஊர் = சோழ நாட்டின் தலைநகர் தஞ்சாவூர்.

பிறந்ததில் ஒன்றும் புதினம் இல்லை.வீட்டின் தலை குழந்தை பெண்ணாக பிறந்ததில் எல்லாறுக்கும் மகிழ்ச்சி. குறிப்பாக அப்பாவை பெற்ற பாட்டிக்கு.

பாட்டி

இவற்களை பற்றி அடுத்த பதிவில்...........

Tuesday, March 27, 2007

விடுதலை! விடுதலை!! விடுதலை!!!

எதிலிருந்து னு கேட்கிறீர்களா? என் பைய்யனிடமிருந்து தான். இவ்ளோ நாளா க்ருஷ்ணா படிக்கிறேன் னு கம்ப்யூட்டர் பக்கமே விடவில்லை. இப்போ தான் 12 வது பரீட்ஷை முடிவடைந்தது. இனிமே ஜாலி தான். ஆனாலும் ஒரு கஷ்டம். அவனும் இனிமே போட்டிக்கு வந்துடுவான். சரி நமக்கு நேரம் கிடைக்காமையே போயிடுமா என்ன? நிரையவே வேலை வச்சிட்டு இருக்கேன். முக்யமா டி வி பாக்க்னுங்க, அப்புறமா சின்னத்துக்கும் லீவு விட்டா ஊருக்கு போய் நிம்மதியா கொஞ்ச நாள் இருந்துட்டு வரணும், எழுத நினைத்தது எல்லாம் ப்ளாக் -ல் எழுதனும். அவ்ளோ தான் இப்போதைக்கு.

இப்போ என்ன சொல்ல வரேன்னு தான கேக்கரீங்க??

என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது தான். தெரியுது. என்ன செய்ய? நான் எழுதினா தானே நல்ல படியா எழுதலாம்.

அதனால இனி முடிந்த வரையில் தினம் என் வரலாறை எழுத போகிறேன்.

தப்பிச்சுகோ!!!!!